blogs News Sports

ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளிய வருண் சக்கரவர்த்தியின் கதை!

varun c
Written by admin

27 வயது தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியின் கதை எந்த ஓர் இளைஞரையும் ஊக்கப்படுத்தக்கூடியது.

25 வயதுக்கு மேல் கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபட்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8.40 கோடியை அள்ளி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் வட்டாரத்திலேயே இவருடைய கதையைக் கேட்டால் ஆச்சர்யப்படுவார்கள்.

ஆரம்பத்தில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில்தான் பல வருடங்களாக விளையாடியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. ஆனால் 12-வது முடித்தபிறகு 5 வருடம் ஆர்கிடெக்சர் படிப்பில் கவனம் செலுத்தியதால் கிரிக்கெட்டை மறந்துபோனார்.

அதன்பிறகு 2 வருடங்கள் வேலைக்கும் சென்று கொண்டிருந்ததால், கிரிக்கெட் அவரது வாழ்க்கையிலிருந்து மெல்ல விலக ஆரம்பித்தது. கிரிக்கெட் பார்ப்பதையும் நிறுத்தினார். 7 வருடங்கள் இப்படியே ஓடிப்போயின. இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் கூட கவனம் செலுத்தவில்லை என்று இணையத்தளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

வேலைக்குச் செல்லும்போதுதான் பலருக்கும் தன்னுடைய உண்மையான ஆர்வம் எது என்று தெரியவரும். படித்த படிப்பும், செய்கிற வேலையும் தனக்கானவை அல்ல என்பது புரியும். அதேசமயம் ஆர்வத்தின் பின்னால் செல்லலாமா அல்லது இருக்கிற வேலையிலேயே ஒட்டிக்கொண்டுவிடலாமா என்கிற ஒரு குழப்பமும் ஏற்படும்.

வருணுக்கும் இந்த நிலை உண்டானது. வேலையில் ஈடுபடுவதைவிடவும் கிரிக்கெட்டை முழு நேரமாக விளையாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியிருக்கிறது. அதுவும் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் 25-வது வயதில். அப்படிச் செய்தால் சம்பளம் கிடைக்குமா, எதிர்காலம் உண்டா என்றெல்லாம் யோசிக்கவில்லை. கிரிக்கெட் ஆடவேண்டும் என்று முடிவெடுத்தார். வேலையை உதறினார்

வேலையில் என்னால் சுதந்தரமாகச் செயல்படவில்லை. இது என் வாழ்க்கையல்ல, கிரிக்கெட்டில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டால் கூட சந்தோஷமாக இருப்பேன் என்று தன் முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடி என்ன செய்யப்போகிறாய் என்கிற பலருடைய கேள்விக்கு அப்போது அவரிடம் விடை இல்லை.

வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஓர் உருப்படியான காரியம் செய்தார். லீக் கிரிக்கெட்டுகளில் அவ்வப்போது விளையாடி வந்தார். அதைவிடவும் வலைப்பயிற்சியில் ஈடுபடும் பேட்ஸ்மேன்களுக்குப் பந்துவீசும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். வேகப்பந்து வீச்சாளராக வலைப்பயிற்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தினார். அவ்வப்போது ஆர்பிஐ அணிக்காக லீக் ஆட்டங்களில் விளையாடினார். வேறு சில அணிகளுக்கும் விளையாடிய நிலையில் காலில் காயம் ஏற்பட்டது. இனிமேல் வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் காயம் மேலும் தீவிரமாகும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனால் என்ன என்று சுழற்பந்துவீச்சுக்கு மாறிவிட்டார். 25 வயதில் கிரிக்கெட் தான் எதிர்காலம் என முடிவெடுத்தவர் அப்போது ஒரு புதிய பந்துவீச்சு முறையும் கற்றுக்கொண்டார். லெக் ஸ்பின். அதில் பல்வேறு தந்திரங்களைப் புகுத்த முயற்சிகள் எடுத்தார். முக்கியமாக கேரம் பந்துவீச்சின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். டிவிஷன் லீக் ஆட்டங்களில் அதைப் பயன்படுத்தியபோது விக்கெட்டுகள் கைமேல் விழுந்தன. யூடியூபில் அனில் கும்ப்ளேவின் விடியோக்கள் வருணுக்கு நிறைய யோசனைகளைத் தந்தன.

கடந்த வருட தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் வருணுக்கு ஓர் இடம் கிடைத்தது. காரைக்குடி அணிக்காக விளையாடியவர், மிக மோசமாகப் பந்துவீசியதால் வந்த வேகத்தில் காணாமல் போனார். ‘என் நண்பர்கள் 50 பேரை என்னுடைய பந்துவீச்சைப் பார்க்க அழைத்தேன். ஆனால் மோசமாகப் பந்துவீசியதால் எல்லோரும் என்னை விமரிசனம் செய்தார்கள். அதனால் இந்த வருடம் யாருக்கும் டிக்கெட் கொடுக்கவில்லை; என்று அவர் பேட்டியளித்துள்ளார். 

முக்கியமான ஒரு டி20 போட்டியில் பங்கேற்றபிறகும் திறமையைச் சரியாக வெளிப்படுத்தாததால் வருணின் திறமை மீது பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது.அப்போது என்னைப் பலரும் ஜீரோ என்று குறிப்பிட்டார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது அப்படி யாரும் அழைப்பதில்லை’ என்று கடந்த கால நினைவுகளை அசைபோடுகிறார். ஆனாலும் அவருடைய பெற்றோர் ஒன்றும் சொல்லவில்லை. உனக்குப் பிடிக்கும் என்றால் அதிலேயே ஈடுபடு என்று சொல்லிவிட்டார்கள். இனி யாருடைய விமரிசனமும் தேவையில்லை எனத் தொடர்ந்து பந்துவீச்ச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நான்காவது டிவிஷன் போட்டியில் 4 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் ஐபில் போட்டிக்காக சென்னையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசியுள்ளார் வருண். இந்த வாய்ப்புக்காக அவர் மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. பிராவோ, இம்ரான் தஹிர் போன்றோர் வருணைத் தனியாக அழைத்துப் பேசி ஊக்கமளித்துள்ளார்கள். எனினும் சென்னையில் நடைபெறவேண்டிய ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டதால் அந்த வாய்ப்பும் சில நாள்களே நீடித்தன. இதன்பிறகு வருணுக்கு உதவியுள்ளார் தினேஷ் கார்த்திக். கொல்கத்தாவுக்குச் சென்று கேகேஆர் அணியினரின் வலைப்பயிற்சியில் பந்துவீசியுள்ளார். 10 நாள்கள் அங்கிருந்ததில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் திறமை, பயிற்சி முறைகள் பற்றி மேலும் புரிந்துகொண்டார். இதன்பிறகு மீண்டும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் ஒரு வாய்ப்பு கிடைத்தபோது தான் யார் என்பதை நிரூபித்தார்.

இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்குத் தேர்வான வருண், அட்டகாசமாகப் பந்துவீசினார். 10 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகள். எகானமி ரேட் – 4.70. இதுதான் வருண் அடைந்த முதல் பெரிய வெற்றி. இதனால் விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியில் வருணுக்கு இடம் கிடைத்தது. அதில் இன்னும் ஒரு படி மேலே சென்று 9 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகள் எடுத்தார். பிறகு ரஞ்சி போட்டியில் தமிழக அணியில் இடம் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியிலும் இடம்பெற்றார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் மும்பை, கொல்கத்தா, சென்னை அணிகள் வருணைத் தேர்வு செய்ய கடும்போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வீரர் அஸ்வினை கேப்டனாகக் கொண்டுள்ள பஞ்சாப் அணி, ரூ. 8.40 கோடிக்கு அஸ்வினைத் தேர்வு செய்துள்ளது. காலம் எப்படியெல்லாம் ஆச்சர்யங்களை அளிக்கிறது!

About the author

admin

Leave a Comment